புதுச்சேரி: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்.. ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை


புதுச்சேரி: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்..  ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை
x

பெரும்பாலான கடைகள் அடைப்பு, பந்த் காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

முழுஅடைப்பின்போது புதிய பஸ் நிலையம், அரியாங்குப்பம், கன்னியக்கோவில், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, சேதராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பந்த் போராட்டத்தின்போது பஸ், ஆட்டோ, டெம்போ போன்றவற்றை இயக்கமாட்டோம் என்று ஏ.ஐ.சி.டி.யு., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. அதேநேரத்தில் அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளன.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அரசுத் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று (புதன்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்துக்கு புதுவை அரசு ஊழியர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உரிய அனுமதியின்றி அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது நியமன விதிகளுக்கு எதிரானது ஆகும்.

எனவே அரசுத்துறைகள், சார்பு நிறுவனங்கள், கழகங்கள், சங்கங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு அவசர தேவையின்றி விடுமுறை வழங்கக்கூடாது. உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது. அத்தகையவர்கள் மீது விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்:" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தசூழலில் பாதுகாப்பு பணியில் சட்டம் - ஒழுங்கு, இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படையினர் என 1,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் போராட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கினை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமையக கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், போலீசார் காலை 5 மணிக்கே பணிக்கு வந்துவிட வேண்டும். முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். கடைகளை அடைக்கச் சொல்லி யாராவது வற்புறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது சொத்துகளுக்கு யாராவது சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். போராட்டம் முடியும் வரை பாதுகாப்பு பணியில் கவனமுடன் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும்பாலான கடைகள் அடைப்பு, பந்த் காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story