

பதவி ஏற்பு
புதுவை சட்டமன்ற தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. தேர்தலில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் எந்த கட்சியும் தனி மெஜாரிட்டி பெறும் வகையில் போட்டியிட
வில்லை.இதனால் ஆட்சி அமைக்க என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி உரிமை கோரியது. அதன்படி கவர்னரை சந்தித்து கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவருடன்
அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. இதன்பின் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ரங்கசாமி திட்டவட்டம்
அதாவது, துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர்களை கேட்டு பா.ஜ.க. பிடிவாதம் காட்டியது. ஆனால் இதற்கு ரங்கசாமி பிடி கொடுக்க மறுத்தார். இந்தநிலையில் கடந்த வாரம் பா.ஜ.க. மேலிட பார்வையாளராக ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. புதுச்சேரி வந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.அதன்பின் ரங்கசாமியை சந்தித்து அமைச்சரவை குறித்து ஆலோசித்தார். அப்போது துணை முதல்-அமைச்சர் என்பதை விட்டு விட்டு பேசினால் பேசலாம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தெரிகிறது.இதுபற்றிய விவரம் கட்சி மேலிடத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து ரங்கசாமியிடம் நேரடியாக பேசியதை தொடர்ந்து சபாநாயகர், 2 அமைச்சர் பதவி இடங்களை தர ரங்கசாமி ஒப்புக் கொண்டார்.
முடிவுக்கு வந்த இழுபறி
இதுபற்றி பா.ஜ.க. தலைவர்களும் பதவிகளை பகிர்வதில் குழப்பம் இல்லை. இரு கட்சிகளுடனும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.இதனால் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையிலான இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்தது.சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பதவி தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது ஏம்பலம் செல்வத்தை சபாநாயகர் பதவிக்கு முன் நிறுத்துவது என்றும் அமைச்சர் களாக நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோரை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இதுதொடர்பான தகவலை மேலிட பார்வையாளரான ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. முதல்-அமைச்சர் ரங்க சாமியை சந்தித்து தெரிவித்தார்.
சபாநாயகர் தேர்தல்
அடுத்தகட்டமாக சட்டமன்றத்தை கூட்டி சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (புதன்கிழமை) சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வம் பெயரை பா.ஜ.க. மேலிடம் பரிந்துரை செய்தது. இதற்கிடையே சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு போட்டியிடுவோர் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இதையொட்டி நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமி நாதன் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க., என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் சபாநாயகர்
வேட்பாளராக ஏம்பலம் செல்வத்தை போட்டியிட தேர்வு செய்வது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் எம்.எல்.ஏ.க் கள் நமச்சிவாயம், ஜான்குமார், ஏம்பலம் செல்வம், கல்யாணசுந்தரம், சாய் சரவணன், ரிச்சர்ட், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேட்பு மனு தாக்கல்
இந்த கூட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் ஏம்பலம் செல்வம் நேற்று சட்டசபை செயலாளர் முனிசாமியிடம் மனு தாக்கல் செய்தார்.அவரது வேட்புமனுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்மொழிந்தார். பா.ஜ.க. சட்டமன்ற கட்சிதலைவர் நமச்சிவாயம் வழிமொழிந்தார். இதேபோல் 8 மனுக்கள் எம்.எல்.ஏ.க்களால் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் பெறப்பட்டது.
போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள், இன்று நண்பகல் 12 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். போட்டியிருந்தால் நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் தேர்தல் நடைபெறும். இல்லையெனில் ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்.தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் உடனே அவர் பதவி ஏற்றுக் கொள்கிறார். புதிய சபாநாயகரை அவருக்கான ஆசனத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியும், எதிர்க்கட்சி தலைவரும் அமர வைக்கிறார்கள்.
மீண்டும் தள்ளிப் போகிறது
சபாநாயகர் பதவி ஏற்பு அன்றே அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இதில் மாறுதல் ஆகி உள்ளது. அதாவது, பா.ஜ.க. சார்பில் அமைச்சர்களின் பட்டியலை கட்சி மேலிடம் இன்னும் ரங்கசாமியிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கவில்லை.அந்த பட்டியலை வழங்கிய பிறகு தான் முதல்-அமைச்சர் ரங்கசாமி அதை கவர்னருக்கு பரிந்துரை செய்வார். இதனால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போகிறது. வருகிற 21-ந் தேதி (திங்கட் கிழமை) புதிய அமைச்சர்கள் பதவியேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜூன் 14-ந் தேதி (நேற்று) அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் அதுவும் தள்ளிபோனது. தற்போது நாளை (புதன்கிழமை) நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போகிறது.