புதுச்சேரி: 6 தொகுதிகளால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் இழுபறி; தலைமை ஏற்பதில் போட்டி

புதுச்சேரியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும் என்பது இரு கட்சிகளின் விருப்பமாக இருக்கிறது.
புதுச்சேரி: 6 தொகுதிகளால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் இழுபறி; தலைமை ஏற்பதில் போட்டி
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதற்காக புதுவையில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 இடங களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. 2-வது நாளான நேற்று யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகவில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையே இன்று (புதன்கிழமை) அமாவாசை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய சிறந்த நாளாக கருதுகின்றனர். எனவே காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் அவரவர் வாபஸ் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும் என்பது இரு கட்சிகளின் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று இரு கட்சிகளும் நினைப்பதால் தொகுதி பங்கீடு முடிவடையவில்லை. இரு கட்சிகளின் தலைமையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய குறைந்த காலமே இருப்பதினால் இரு கட்சிகளும் இன்று (புதன்கிழமை) 30 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்து திட்டமிட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் இருகட்சிகளும் தனித்து போட்டியிடலாம் என தெரிகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, திருபுவனை, மங்கலம், கதர்காமம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.-காங்கிரஸ் இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளது. முன்னதாக தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய புதுச்சேரி காங்கிரஸ் தலைமை டெல்லி சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com