புதுச்சேரி: ரெயில் நிலைய பணிகளை நேரில் ஆய்வு செய்த எல். முருகன்

புதுச்சேரியின் வளர்ச்சிக்கும், சுற்றுலா மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த திட்டம் பெரும் பங்காற்றும் என எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய இணை மந்திரி எல்.முருகன்
Published on

புதுச்சேரி,

பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமான 'அமிர்த் பாரத்' திட்டத்தின் கீழ், இந்தியாவின் முக்கிய ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி ரெயில் நிலையமும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

புதுச்சேரியின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான உள்கட்டமைப்பு, விசாலமான காத்திருப்பு அறைகள், நவீன லிப்ட் வசதிகள் மற்றும் பயணிகளுக்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த நிலைய பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆய்வு

இன்றைய தினம், புதுச்சேரி வருகையின்போது, மத்திய அரசின் அமிர்த் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.90 கோடிக்கும் அதிக மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் புதுச்சேரி ரெயில் நிலைய பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

உலக தரம்

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதோடு, புதுச்சேரியின் வளர்ச்சிக்கும், சுற்றுலா மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த திட்டம் பெரும் பங்காற்றும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் ரெயில்வே உள்கட்டமைப்பை உலக தரத்திற்கு உயர்த்திட தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆய்வின்போது புதுச்சேரி அரசின் மந்திரி ஆறுமுகம் நமச்சிவாயம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, புதுச்சேரி பாஜக மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com