

அனந்த்நாக்,
ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ந்தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26ந்தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதன்பின்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை பகுதி வழியேயான ஊடுருவல்கள் நடந்து வந்தபோதிலும், படையினர் அவற்றை முறியடித்து வருகின்றனர். இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் கடந்த புதன்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீர் ஐ.ஜி. இன்று கூறும்போது, லெத்போரா மற்றும் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான சமீர் தார் புகைப்படம் கடந்த 30ந்தேதி அனந்த்நாக் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவருடன் ஒத்து போகிறது. நாங்கள் மரபணு மாதிரி ஒப்பீட்டுக்கு செல்ல இருக்கிறோம் என்று கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய, உயிருடன் இருந்த கடைசி பயங்கரவாதி சமீர் என்றும் அவர் கூறியுள்ளார்.