புனே: அரசு சொகுசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்; குற்றவாளி கைது

வீட்டில் உணவருந்த வந்தபோது குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
புனே,
புனே நகரில் உள்ள சுவர்கேட் பஸ் நிலையத்துக்கு கடந்த 25-ம் தேதி அதிகாலை வேளையில் வந்த 26 வயது இளம்பெண் அரசு பஸ்சுக்குள் பலாத்காரம் செய்யப்பட்டார். சத்தாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல வந்த அந்த பெண்ணை ஆசாமி ஒருவர் தன்னை கண்டக்டர் கூறிக்கொண்டு ஆள்இல்லாத சொகுசு பஸ்சில் ஏற்றி விட்டு கொடூர செயலில் ஈடுபட்டு விட்டு தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம் ஒன்றில் அரசு பஸ்சுக்குள் நடந்த கொடூரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 2012-ல் டெல்லியில் நடந்த நிர்பயா கூட்டு பலாத்காரத்தை நினைவுப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
யாராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஆசாமி புனே மாவட்டம் சிரூர் தாலுகா குனட் கிராமத்தை சேர்ந்த ராம்தாஸ் காடே(வயது36) என்று தெரியவந்தது. பலாத்காரத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச்செல்லும் காட்சி பஸ் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
காமுக ஆசாமி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க போலீசார் 13 தனிப்படை அமைத்து இருந்தனர். போலீஸ் படைகள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தேடிவந்தனர். ராம்தாஸ் காடே பல்வேறு திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும், 2019-ம் ஆண்டு முதல் ஜாமீனில் வெளியில் இருப்பதும் தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று பிற்பகலில் சுமார் 100 போலீசார் ராம்தாஸ் காடேயின் சொந்த கிராமத்துக்கு சென்றனர். இதனால் அந்த கிராம மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் கிராமப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் குற்றவாளி பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின்பேரில் டிரோனை பறக்கவிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கிராமத்தின் வீடுகள் மீதும், சுற்றுப்புறங்களிலும் டிரோன் பறந்தது. ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் போலீசார் ஆசாமியின் உறவினர்கள், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில், இ ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்தாஸ் காடே, ஷிரூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், வீட்டில் உணவருந்த வந்தபோது,புனே குற்றப்பிரிவு போலீசாரால் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டார். அவரை அங்குள்ள காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை கிடைக்க மாநில அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட கூறியுள்ளார்.






