முதலாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு; புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி

நடிகர் புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
Published on

பெங்களூரு:

நடிகர் புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பவர் ஸ்டார் புனித்ராஜ்குமார்

கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி புனித் ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். உடலை கட்டுக்கேப்பாக வைத்திருப்பவர் தனது 45 வயதில் உயிரிழந்ததால் அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும், கர்நாடக மக்களும் சோக கடலில் மூழ்கினர்.

மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் உடல், அவரது தந்தை-தாயின் சமாதி அருகில் கன்டீரவா ஸ்டூடியோவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஆவணப்படம் வெளியீடு

அவரது சமாதிக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பணியாற்றி திரும்பிய அவரது ரசிகர்கள், கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இருந்து தினமும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவானது. இதையொட்டி அவர் இறுதியாக நடித்த கந்ததகுடி ஆவணப்படம் நேற்று முன்தினம் கர்நாடகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க குவிந்தனர். புனித்ராஜ்குமார் நடித்த இறுதிபடம் என்பதால் உணர்ச்சி பெருக்கில் பலரும் கண்ணீர்விட்ட படியே படத்தை பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் புனித்ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையாட்டி கன்டீவரா ஸ்டூடியோவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நினைவிடத்தில் அஞ்சலி

அங்கு புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, நடிகர் சிவராஜ் குமார், நடிகர் ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் முதலில் வந்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது புனித்ராஜ்குமாரை நினைத்து அவர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அவர்களை தொடர்ந்து கன்னட திரையுலகினர், ரசிகர்கள் புனித்ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இளம் ரசிகர்கள், ரசிகைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். இதனால் கன்டீரவா ஸ்டூடியோ பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தும் விதமாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித்ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பலர் தங்கள் செல்போன்களில் புனித் சமாதி அருகே புகைப்படங்களை எடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com