

சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி குர்தீப் சிங் (வயது 45). இவர் பெரோஷ்பூர் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
இந்நிலையில், குர்தீப் சிங் நேற்று மாலை காரில் மண்டாட் பகுதியில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது, குர்தீப் சிங்கின் காரை மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இடைமறித்தனர். பின்னர், காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் குர்தீப் மீதும் அவருடன் சென்ற ஹர்தீப் (வயது 22) என்ற இளைஞர் மீதும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குர்தீப் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குர்தீப் சிங்கை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.