

லூதியானா
அம்பேத்கர் சிலையின் பாதுகாப்பு கண்ணாடி கூண்டு மீண்டும் சேதம் அடைந்தது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் ஜலந்தர் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையின் பாதுகாப்பு கண்ணாடி கூண்டு மீது, கல் வீசி தாக்கப்பட்டு உள்ளது. இதில், கண்ணாடி கூண்டின் ஒரு பகுதி சேதம் அடைந்து உள்ளது.
இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அந்த பகுதியில் யாசகம் பெற்று வரும் 45 வயது பெண் அதன் மீது கல்லை எறியும் காட்சி இருந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னணியில் யாரேனும் உள்ளனரா? என்றும் எதற்காக அவர் கல் வீசினார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கு 4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஜூலையிலும் அம்பேத்கர் சிலையின் கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டது. அப்போது பல்வேறு சமூகத்தினரும் திரண்டு வந்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2-வது முறையாக மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
இதனை அடுத்து, சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், எவரேனும் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர்.