பஞ்சாப்: 100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு நிதி

100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தின் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களின் தலைவர்கள், உறுப்பினர்களுடன் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று காணொலி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், கொரோனாவை முற்றிலுமாக வேரறுக்கும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் நூறு சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ.10 லட்சம் சிறப்பு மேம்பாட்டு நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியும், கொரோனாவுக்கான லேசான அறிகுறி தென்பட்டாலும் உடனே பரிசோதனை செய்துகொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனாவின் கொடிய விளைவுகளையும், அதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிர்களைக் காக்க முடியும் என்பதையும் கிராமப்புற மக்களுக்கு உணர்த்த வேண்டும், அதற்கு சிறப்பு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமரிந்தர் சிங் வலியுறுத்தினார்.

கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்களை கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் நடத்த வேண்டும், அதற்கு முன்னாள் ராணுவத்தினரின் சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். கொரோனா அவசர சிகிச்சைக்காக பஞ்சாயத்து நிதியில் இருந்து தினமும் ரூ.5 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரையிலும் பயன்படுத்திக்கொள்ள மாநில அரசு அனுமதித்திருப்பதை பஞ்சாயத்து தலைவர்களுக்கு முதல்-மந்திரி அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com