பஞ்சாப்: மனைவியை திட்டமிட்டு கொலை செய்த ராணுவ வீரர் கைது

பெற்றோரின் முழுச் சம்மதம் இல்லாத நிலையிலும், கடந்த 2024-ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மனைவி திட்டமிட்டு கொலை
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணம்

பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் உள்ள பாஜேவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேப்பி சிங். இவர் ராணுவ வீரர். இவரும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ரமந்தீப் கவுர் (வயது 30) என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். பெற்றோரின் முழுச் சம்மதம் இல்லாத நிலையிலும், கடந்த 2024-ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தகராறு

திருமணத்திற்குப் பிறகு ஹேப்பி சிங்கின் பெற்றோர், ரமந்தீப் கவுரைத் தங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கடுமையான வாக்குவாதங்களும், மனக்கசப்புகளும் ஏற்பட்டு வந்தன. மேலும் குடும்பத் தகராறு எல்லை மீறியதால், ரமந்தீப் கவுரும் அவரது கணவரும் மான்சாவில் உள்ள சொந்த ஊரை விட்டு சென்று, சங்கரூர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.

திட்டமிட்ட கொலை

இந்நிலையில் ஹேப்பி சிங் தனது மனைவியுடன் வாழ விருப்பமில்லாமல் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மனைவியை கொலை செய்வதற்காக, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பசியானா பாலத்திற்கு காரில் அழைத்துச் சென்று அருகே இருக்கும் பக்ரா கால்வாயில் உள்ள ஆற்று நீரில் காரை வேண்டுமென்றே கவிழ்த்துள்ளார்.

மனைவி காரிலேயே இருந்தவாறு நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ஹேப்பி சிங் மட்டும் நீச்சலடித்து தப்பி உயிர் பிழைத்ததாக நடித்துள்ளார்.

புகார்

ரமந்தீப் கவுரின் சகோதரர் குர்ஜீத் சிங், இந்த மரணத்தில் சந்தேகமடைந்து, இது விபத்து மரணமல்ல, திட்டமிட்ட கொலை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஹேப்பி சிங்கை விசாரணை செய்தனர். அப்போது ஹேப்பி சிங், தனது கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்துவிட்டதாக நாடகமாடினார்.

நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது மீட்புக்குழுவினர் காரை ஆற்றில் இருந்து மீட்டபோது, டிரைவர் இருக்கையை ஒட்டியிருந்த கதவு மட்டும் சரியாக மூடப்படாமல் அரைகுறையாகத் திறந்திருந்தது. ஹேப்பி சிங் கார் ஆற்றுக்குள் பாய்வதற்கு முன்பே திட்டமிட்டு கதவைத் திறந்து வைத்துக்கொண்டு தப்பியதையும், ரமந்தீப் கவுரை காரினுள்ளே பூட்டி மூழ்கடித்ததையும் காவல்துறையினர் இந்த ஆதாரத்தின் மூலம் கண்டுபிடித்தனர்.

கைது

உடனே போலீசார் ஹேப்பி சிங் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த மரணத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஹேப்பி சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com