117 தொகுதிகளுக்கான பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடங்கியது..!

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
117 தொகுதிகளுக்கான பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடங்கியது..!
Published on

சண்டிகர்,

முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்து களத்தில் உள்ளன. 93 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முக்கிய வேட்பாளர்களாக முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி (காங்கிரஸ்-பதவுர், சம்கவுர் சாகிப்), சித்து (காங்கிரஸ்-அமிர்தசரஸ்), அமரிந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்-பாட்டியாலா), பிரகாஷ் சிங் பாதல் (சிரோமணி அகாலிதளம்-லம்பி), குல்வந்த் சிங் (ஆம் ஆத்மி-மொகாலி) உள்ளிட்டோர் களத்தில் நிற்கிறார்கள்.

ஆளும் காங்கிரசுக்காக ராகுல் காந்தி, சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத்சிங் சித்து, பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி, சிரோமணி அகாலி தளம் கட்சிக்காக பிரகாஷ் சிங் பாதல், ஆம் ஆத்மிக்காக கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

2.14 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்காக 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது காலை 8 மணிக்கு பஞ்சாப் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை நடைபெற உள்ள தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com