

சண்டிகார்
பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 31 வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி 300 யூனிட் இலவச மின்சார திட்டம், பெண்களுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான சுகாதார காப்பீடு உள்பட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள், யாருடன் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார யுக்தி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழுவினர் ஒன்றாக கூடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், சர்வே அடிப்படையில் கிடைத்த உளவு தகவலை பற்றியும் மற்றும் சீட் வினியோகம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில், 31 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குமார் குப்தா ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே 40 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி அறிவித்த நிலையில், தற்போது வெளியான 2-வது பட்டியலால் மொத்தம் 71 வேட்பாளர்களை இறுதி செய்துள்ளோம் என்று அக்கட்சி தெரிவித்து உள்ளது.