பஞ்சாப்: ரெயில் வழித்தடத்தில் குண்டுவெடிப்பு; ஓட்டுநர் காயம் - பயங்கரவாத செயலா?


பஞ்சாப்: ரெயில் வழித்தடத்தில் குண்டுவெடிப்பு; ஓட்டுநர் காயம் - பயங்கரவாத செயலா?
x

ரெயிலுக்கோ அல்லது ரெயில் தண்டவாளத்திற்கோ எந்த பெரிய பாதிப்பும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

பதேகார் சாகிப்,

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் 26-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ள சூழலில், பஞ்சாப்பின் பதேகார் சாகிப் நகரில் கான்பூர் கிராமம் அருகே ரெயில் வழித்தடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.

இதனை தொடர்ந்து நகரில் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என காவல் துறை துணை ஆணையாளர் ஹிமான்சு ஜெயின் கூறினார். இதுபற்றி பஞ்சாப் போலீசார் கூறும்போது, குறைந்த திறன் கொண்ட லேசான வெடிவிபத்து அது. ரெயில் ஓட்டுநருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

ரெயிலுக்கோ அல்லது ரெயில் தண்டவாளத்திற்கோ எந்த பெரிய பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். எனினும், அனைத்து போலீஸ் அதிகாரிகள் உள்பட மொத்த பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளதுடன், தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

இந்த விசயத்தில் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மந்திரி சஞ்சீவ் அரோரா கூறினார். பஞ்சாப் போலீசார், சிறப்பு படை பிரிவினர் துணையுடன் நடத்திய தீவிர சோதனையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்த குற்றவாளி ஒருவரை அதிரடியாக நேற்று கைது செய்தனர். இதனை வெளிநாட்டு சதி என பஞ்சாப் டி.ஜி.பி. கூறினார்.

இதுதொடர்பாக அமிர்தசரஸ் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் நாட்டின் 77-வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

குடியரசு தின விழாவையொட்டி, விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும். இந்த சூழலில், நடந்த சந்தேகத்திற்குரிய இந்த வெடிகுண்டு தாக்குதல் பயங்கரவாத செயலா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story