போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்- பஞ்சாப் அரசு

அரியானாவின் கானாரி எல்லையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் மோதல் நடந்தது. அதில், சுப்கரன் சிங் என்ற 21 வயதான விவசாயி பலியானார்.
போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்- பஞ்சாப் அரசு
Published on

அமிர்தசரஸ்,

விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13-ந் தேதி தொடங்கினர். பஞ்சாப்-அரியானா இடையிலான ஷாம்பு எல்லையிலும், கானாரி எல்லையிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மத்திய அரசுடன் நடத்திய 4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, மத்திய மந்திரிகள் முன்வைத்த யோசனையை தொடர்ந்து, கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் போராட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்தனர்.

இதற்கிடையே, கடந்த 21-ந் தேதி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் தடுப்புகளை நோக்கி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அதில், சுப்கரன் சிங் என்ற 21 வயதான விவசாயி பலியானார். இதைத்தொடர்ந்து, போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முடிவு செய்வதாகவும் விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே போராட்டத்தின்போது பலியான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்று பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com