பஞ்சாப் தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க.வை நம்பி வீழ்ந்த கேப்டன் அமரீந்தர் சிங்!!

பாஜக கூட்டணியில் களம் கண்ட அமரீந்தர் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி வெற்றி பெற்றார்.
பஞ்சாப் தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க.வை நம்பி வீழ்ந்த கேப்டன் அமரீந்தர் சிங்!!
Published on

சண்டிகர்,

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இப்போதைய நிலவரம், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்பதை காட்டுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் ஆம் ஆத்மி முதல் இடத்திலும் உள்ளன.

இந்நிலையில், பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்(பிஎல்சி கட்சி) பின்னடைவை சந்தித்து வந்தார்.

பஞ்சாப் தேர்தலில், பாஜக தனது நீண்டகால கூட்டாளியான எஸ்ஏடி(சிரோன்மணி அகாலிதளம்) கட்சியை விட்டு பிரிந்து, காங்கிரசை விட்டு பிரிந்த முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கின் புதிய கட்சியான பிஎல்சி(பஞ்சாப் லோக் காங்கிரஸ்) மற்றும் எஸ்ஏடி (சன்யுக்த்) உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் களம் கண்ட அமரீந்தர் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் அடைந்த இந்த படுதோல்வி அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரை போலவே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

பஞ்சாப் மாநில தற்போதைய முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி சம்கௌர் சாஹிப் மற்றும் பதவுர் என இரண்டு தொகுதிகளில் களம் காணுகிறார். அந்த 2 தொகுதிகளிலும் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் நவ்ஜோத் சிங் சித்து பின்னடைவை சந்தித்துள்ளார். ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிடும் சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம் தலைவர்) பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் துரி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் முன்னிலை வகிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com