பஞ்சாப்: அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி கைது

வாரிஸ் பஞ்சாப் டே அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளியை போலீசார் இன்று கைது செய்து உள்ளனர்.
பஞ்சாப்: அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி கைது
Published on

சண்டிகர்,

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏந்திய ஆதரவாளர்களுடன் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில், அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதனால், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் எழுந்து உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இந்த விவகாரத்தில் போலீசார் தனிப்படை அமைத்து சிங்கை தேடி வந்தனர். ஆனால், அவர் இன்னும் போலீசில் சிக்கவில்லை. இதனால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

எனினும், அவரோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளரான பப்பல்பிரீத் சிங், ஹோஷியார்பூரில் இருந்து சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 18-ந்தேதி, போலீசாரிடம் இருந்து அம்ரித்பால் தப்பியதில் இருந்து பாப்பல்பிரீத் அவருடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அம்ரித்பால் சிங்கின் மற்றொரு முக்கிய கூட்டாளியான ஜோகா சிங் என்பவர சர்ஹிந்த் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்து உள்ளனர். இதனை டி.ஐ.ஜி. எல்லை சரக நரீந்தர் பார்கவ் உறுதி செய்து உள்ளார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அம்ரித்பால் சிங்குடன் ஜோகா சிங் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர். கடந்த மார்ச் 18-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை அம்ரித்பாலுடன் ஜோகா சிங் உதவியாக இருந்து வந்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.

அம்ரித்பாலை கடந்த மார்ச் 27-ந்தேதி பஞ்சாப்புக்கு திரும்ப கொண்டு வந்து விட உதவியதுடன், நேரடி தொடர்பிலும் இருந்து வந்து உள்ளார். அம்ரித்பாலுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் வாகன வசதிகளையும் அவர் செய்து கொடுத்து உள்ளார் என பார்கவ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com