கூலித்தொழிலாளிக்கு அடித்த யோகம்: ரூ.6 க்கு வாங்கிய லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு

பஞ்சாப் மாநில கூலித் தொழிலாளி, ஒரே நாளில் கோடீஸ்வரரான நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்மயில் சிங். இவர் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். கூலித் தொழிலாளியான இவர், பெரோஷ்பூருக்குச் சென்றபோது, ரூ.6-க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார். மறுநாள், லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்தவரிடமிருந்து ஜஸ்மயில் சிங்குக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில், "ரூ.1 கோடி உங்களுக்கு பரிசாக அடித்துள்ளது" என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு ஜஸ்மயில் சிங் இன்ப அதிர்ச்சியடைந்தார். உடனே, இசை வாத்தியங்களுடன் தனது குடும்பத்தினருடன் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஜஸ்மயில் சிங், கிலோ கணக்கில் இனிப்புகளை வாங்கி, அந்தப் பகுதி மக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து ஜஸ்மயில் சிங் கூறுகையில், "இந்தப் பணத்தை வைத்து ரூ.25 லட்சம் கடனை அடைப்பேன். மீதமுள்ள தொகையை எனது குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவேன்" என்றார்.






