

மும்பை
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு தலைமையிலான அரசில் மந்திரியாக பதவி வகித்து வருபவர் சஞ்சீவ் அரோரா. இந்நிலையில், ஜி.எஸ்.டி. பரிமாற்றங்களில் முறைகேடு தொடர்பான ரூ.100 கோடி பணமோசடி வழக்கில் பஞ்சாப் மந்திரி சஞ்சீவ் அரோராவிடம் அமலாக்க துறை விசாரணை செய்தது.
அவருடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. இதனடிப்படையில், அவரை அமலாக்க துறை நேற்று கைது செய்தது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, மக்கள் பணத்தை யாரேனும் கொள்ளையடித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எவரேனும் ஊழலில் ஈடுபட்டால், நடவடிக்கை பாயும். நான் ஊழலில் ஈடுபடவோ அல்லது ஊழலை அனுமதிக்கவோ மாட்டேன் என தொடக்கத்தில் இருந்து பிரதமர் கூறி வருகிறார். நாங்கள் ஊழல் இன்றி தூய்மையாக பணியாற்றி வருகிறோம்.
அரசு பதவியிலோ அல்லது அரசு அல்லாத பதவியிலோ, எவரேனும் மக்களின் பணத்தை பதுக்கினால், கொள்ளையடித்தால் அல்லது சட்டவிரோத செயலில் ஈடுபட்டால், நிச்சயம் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதில், அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது என்றார்.