

சண்டிகர்,
நாடு முழுவதும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 37,379 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 3,49,60,261 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் பஞ்சாப் மாநிலத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது . மாநிலம் முழுவதும் ஜனவரி 15ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:-
அனைத்து முக்கிய நகரங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர பிற சேவைகளுக்கு அனுமதி கிடையாது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
முகக்கவசம் இல்லையெனில், சேவைகள் இல்லை என்ற வழிமுறை கடைபிடிக்கப்படும். அனைத்து சுகாதார துறை பணியாளர்களும் பணிக்கு வர வேண்டும்.
பார்கள், திரையரங்குகள், மால்கள், உணவகங்கள், ஸ்பாக்கள், ஏசி பேருந்துகள் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி இல்லை.
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பணியாளர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் அனுமதிக்கப்ப்டுவார்கள். தொழிற்சாலைகளிலும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.