

அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தேர்வில் ஆளும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிட தேர்தல் வேலைகளைத் துரிதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்மந்திரியுமான கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் பாட்டியாலா தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். காங்கிரசில் இருந்து விலகிய கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியதுடன் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். கூட்டணி தொகுதி ஒதுக்கீடுகளின்படி, 37 தொகுதிகளில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அதேபோல பஞ்சாப் மாநில முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னியும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக வரவிருக்கும் மாநில சட்டசபைத் தேர்தலில் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள சம்கூர் சாகிப் மற்றும் பர்னாலா மாவட்டத்தில் உள்ள பதூர் ஆகிய இரு இடங்களில் அவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.