பஞ்சாப்: போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதி சுட்டுக்கொலை

நஜீப் சிங் கூர்மையான ஆயுதத்தால் காவலர் ஜஸ்தீப்பை தாக்கியுள்ளார்.
பஞ்சாப்: போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதி சுட்டுக்கொலை
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மத்திய சிறையில் இருந்து 3 கைதிகளை இன்று மருத்துவ பரிசோதனைக்காக 4 காவலர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, காவல்துறையினர் கைதிகளை கைவிலங்கிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, ​​கைதிகளில் ஒருவரான நஜீப் சிங் என்பவர் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது காவலர் ஜஸ்தீப் அந்த கைதியை பிடிக்க முயன்றார். ஆனால் நஜீப் சிங் கூர்மையான ஆயுதத்தால் காவலர் ஜஸ்தீப்பை தாக்கியுள்ளார். இதில் அந்த காவலரின் முகம், கை மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும், காவலரின் துப்பாக்கியையும் நஜீப் சிங் பிடுங்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், தற்காப்புக்காக காவலர் ஜஸ்தீப், தனது துப்பாக்கியை எடுத்து எச்சரிக்கை செய்வதற்காக வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டார். ஆனால் நஜீப் சிங் தொடர்ந்து காவலரை தாக்க முயற்சித்ததால், அந்த காவலர் வேறு வழியின்றி நஜீப் சிங்கை நோக்கி பலமுறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த நஜீப் சிங்கை போலீசார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நஜீப் சிங் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர் ஜஸ்தீப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com