புரெவி புயல்: தமிழக, கேரள முதல் மந்திரிகளுடன் அமித்ஷா பேச்சு

புரெவி புயலை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரள முதல் மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.
புரெவி புயல்: தமிழக, கேரள முதல் மந்திரிகளுடன் அமித்ஷா பேச்சு
Published on

புதுடெல்லி,

நிவர் புயலை அடுத்து வங்க கடலில் கடந்த நவம்பர் 28-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடைகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த புயலானது இன்று காலை மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதனைத்தொடர்ந்து இன்று பிற்பகலில் பாம்பனை ஒட்டி வருகிறது. பிற்பகலுக்கு மேல் தென் தமிழக கடலோர பகுதிகளை கடந்து இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதனால் அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரள மாநில முதல் மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் சாத்தியப்பட்ட அனைத்து ஆதரவும் வழங்கப்படும். இரு மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் பல்வேறு குழுக்கள் குவிக்கப்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com