

காத்மாண்டு,
நேபாளத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது.
89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஷேர் பகதூர் தூபாவின் நேபாள காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தாவின் சிபிஎன் மாவோயிஸ்டு கட்சி உள்பட 4 கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது.
ஆனால் முதல் 2 ஆண்டுகளுக்கு யார் பிரதமராக இருப்பது என்பதில் தூபாவுக்கும், பிரசாந்தாவுக்கும் மோதல் ஏற்பட்டதால் கூட்டணி உடைந்தது. அதை தொடர்ந்து பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணி பிரசந்தா தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது.
அதனையடுத்து, அதிபர் பித்யாதேவி பண்டாரியை சந்தித்து ஆட்சி அமைக்க பிரசந்தா உரிமை கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட அதிபர் புதிய பிரதமராக பிரசந்தாவை நியமித்தார்.
இந்த நிலையில் நேற்று காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் நேபாளத்தின் பிரதமராக 3வது முறையாக பிரசந்தா பதவியேற்றார். அவருக்கு அதிபர் பித்யாதேவி பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.