ஓட்டு போடுவதை கட்டாயமாக்க 9 ஆண்டுகளுக்கு முன்பே முயன்ற மோடி புதிய தகவல்கள்

9 ஆண்டுகளுக்கு முன்பே, ஓட்டு போடுவதை கட்டாயமாக்க நரேந்திரமோடி முயன்றதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓட்டு போடுவதை கட்டாயமாக்க 9 ஆண்டுகளுக்கு முன்பே முயன்ற மோடி புதிய தகவல்கள்
Published on

புதுடெல்லி,

தேர்தல்களில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்கக்கோரி, பா.ஜனதா உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் நாடாளுமன்ற மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது.

அப்போது, சக பா.ஜனதா உறுப்பினர்களான அஜய் டேனி மிஸ்ரா, நிஷிகாந்த் துபே, பிஜு ஜனதாதள உறுப்பினர் பார்த்ருஹரி மகதாப் ஆகியோர் மசோதாவுக்கு எதிராக பேசினர். இந்த விவாதம் இனிவரும் நாட்களிலும் தொடர உள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மோடி, 9 ஆண்டுகளுக்கு முன்பே, ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, கடந்த 2010-ம் ஆண்டு, அம்மாநில உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க திட்டமிட்டார்.

ஆனால், அப்போது கவர்னராக இருந்த கமலா பேனிவால், அம்முயற்சியை கடுமையாக எதிர்த்தார். கருத்துரிமையையும், ஓட்டு போடாமல் இருக்கும் உரிமையையும் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ)-வது பிரிவை மீறும்வகையில் இந்த முயற்சி இருப்பதாக கூறி, அவர் முட்டுக்கட்டை போட்டார். இதனால் மோடியால் அதை செயல்படுத்த முடியவில்லை.

அவர் பிரதமரான பிறகு, குஜராத் முதல்-மந்திரியாக ஆனந்திபென் பட்டேல் பொறுப்பேற்றார். அவர் மோடியின் முயற்சியை கையில் எடுத்தார். அதன்பலனாக, ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் மசோதா, குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மோடி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஓ.பி.கோலி, ஒப்புதல் அளித்ததால், அந்த மசோதா சட்டமானது. இந்தவகையில், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்கிய முதல் மாநிலம் என்ற பெயரை குஜராத் பெற்றது.

இருப்பினும், குஜராத் ஐகோர்ட்டு அந்த சட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com