

மத்தியஸ்த மைய அறக்கட்டளை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், சர்வதேச மத்தியஸ்த மைய அறக்கட்டளை ஒப்பந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது.அதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்று பேசுகையில், மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை வாயிலாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது நமது நாட்டின் பண்பாட்டின் ஓர் அங்கமாக உள்ளது. நமது குழந்தைகளுடனும், சகோதரர்களுடனும், நண்பர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.
வேகமெடுக்கும் மத்தியஸ்தம்
சர்வதேச மத்தியஸ்த மையம் ஐதராபாத் நகரில் அமைவது பொருத்தமாக உள்ளது. இந்த மையத்தின் நிர்வாக குழுவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ரவீந்திரன் இடம்பெறுவார்கள்.இந்தியாவில் மத்தியஸ்தம் தாமதமாக நடைபெறுகிறது என்ற அச்சம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்தது. மத்தியஸ்தம், சமரச சட்டம் கடந்த 1996-ம் ஆண்டு அமலுக்கு வந்தபிறகு, கோர்ட்டுகளுக்கு வெளியே மத்தியஸ்தம் வேகமெடுக்கத் தொடங்கியது.
சர்வதேச புகழ்பெற வேண்டும்
நிறுவனங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை இந்த சர்வதேச மத்தியஸ்த மையத்தின் வாயிலாகத் தீர்த்துக்கொள்ள உரிய ஊக்கத்தை தெலுங்கானா ஐகோர்ட்டு அளிக்க வேண்டும். இந்த மையம் சர்வதேச அளவில் புகழ்பெற வேண்டும்.தெலுங்கானா மண்ணின் மைந்தர், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், நமது நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை ஆவார். அவரது தலைமையிலான ஆட்சியின்போது பொருளாதார சீர்திருத்தங்கள் நம் நாட்டில் தொடங்கின.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சுபாஷ் ரெட்டி, முன்னாள் நீதிபதி ரவீந்திரன், தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஹீமா கோலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.