

மங்களூரு:-
ரூ.8 ஆயிரம் லஞ்சம்
தட்சிண மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ரூபா. இவர் பெல்தங்கடி பகுதியில் அரசு சார்பில் நடைபெறும் கட்டிடப்பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெல்தங்கடியில் மாணவர்களுக்கான விடுதி கட்டுபணிகள் தொடங்கியது.
இந்த பணிகளுக்கு முழு பொறுப்பாளர் ரூபா. இந்த நிலையில் இந்த விடுதி கட்டுமானப்பணிக்கான பணத்தை விடுவிப்பதற்கு காண்டிராக்டர் ஒருவர் ரூபாவை நாடினார். அவரிடம் ரூபா ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே இந்த கட்டிடப்பணிக்கான பணம் விடுவிக்கப்படும் என்று கூறினர். இதற்கு முதலில் மறுத்த காண்டிராக்டர் பின்னர் ரூ.8 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்று கூறினார். அதற்கு ரூபா சம்மதம் தெரிவித்தார்.
பெண் ஊழியர் கைது
இந்நிலையில் காண்டிராக்டர் இது குறித்து லோக் அயுக்தா போலீசில் ரகசிய புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லோக் அயுக்தா போலீசார் காண்டிராக்டரை அழைத்து ஆலோசனை வழங்கினர். மேலும் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை காண்டிராக்டரிடம் கொடுத்து அனுப்பினர்.
அந்த பணத்தை காண்டிராக்டர், ரூபாவிடம் வழங்கினார். அதை ரூபா வாங்கியபோது,அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார் ரூபாவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.