

அரியானாவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , இந்த நாட்டு மக்கள் தற்பெருமை மற்றும் கர்வம் மிக்கவர்களை என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். வரலாற்றிலும் இது நடைபெற்றுள்ளது, மகாபாரதத்திலும் நடைபெற்றுள்ளது. துரியோதனனுக்கும் இதேபோலத்தான் (மோடியை போல) கர்வம் இருந்தது. கிருஷ்ணர் அவரை புரிய வைப்பதற்காக சென்றபோது கிருஷ்ணரையே சிறைப்பிடிக்க முயன்றார் என்று பேசியிருந்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் திஷ்னுபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, பிரியங்கா வதேரா பிரதமர் மோடியை துரியோதனன் என்று கூறியுள்ளார். பிரியங்கா, இது ஜனநாயகம். நீங்கள் சொல்லிவிட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட முடியாது. மே 23ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு தெரிந்து விடும். ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? என்று கூறினார்.
இந்நிலையில் பாட்னாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராப்ரி தேவி பேசுகையில், மோடியை துரியோதனன் என்று அழைத்து பிரியங்கா காந்தி தவறு செய்து விட்டார். அதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தியிருக்க வேண்டும். துரியோதனனைவிடவும் மிகவும் கொடூரமானவர். அவர்தான் நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை கொல்லவும், கடத்தவும் காரணமாக அமைந்துள்ளார். இத்தகைய ஒரு மனிதர் இரக்கமற்ற மனநிலை கொண்டவராகத்தான் இருக்க முடியும் எனக் கூறினார்.