

பாட்னா: '' என் இரண்டு மகன்களுக்கும், அடக்கமான மருமகள் தான் தேவை. தியேட்டர்கள், மால்கள் செல்லும் பெண்கள் தேவை இல்லை,'' என, பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
பீகார் அரசின் அமைச்சர்கள் லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ்பிரதாப் யாதவ் ஆகியோர், தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக உள்ளனர். இதில் தேஜஸ்வி துணை முதல்வராக உள்ளார். தேஜ் பிரதாப் சுகாதார துறை அமைச்சராக உள்ளார். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர்கள் மீதும், லாலு குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், லாலுவின், 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அப்போது ராப்ரி தேவி கூறியதாவது:
தியேட்டர்கள் மற்றும் மால்களுக்கு செல்ல விருப்பப்படும் பெண்களை, என் மருமகள்களாக ஏற்க விரும்பவில்லை. அவர்கள் நல்ல பண்பாட்டை கொண்டிருக்க வேண்டும். என் மகன் தேஜ் பிரதாப்புக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எனவே, வீட்டை கவனித்து கொண்டு, மூத்தவர்களை மதித்து, வெளி வேலைகளையும் திறமையாக பார்த்துக் கொள்ளும் பெண்களே என் மருமகள்களாக வர வேண்டும். குறிப்பாக, அவர்கள் என்னை போல இருக்க வேண்டும்.இவ்வாறு ராப்ரி தேவி கூறினார்.