ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: ‘ரகசியகாப்பு சட்டத்தை பிரதமர் மீறி இருக்கிறார்’ - ராகுல் புதிய குற்றச்சாட்டு

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ரகசியகாப்பு சட்டத்தை மீறி இருக்கிறார் என்ற புதிய குற்றச்சாட்டை ராகுல் காந்தி கூறி இருக்கிறார்.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: ‘ரகசியகாப்பு சட்டத்தை பிரதமர் மீறி இருக்கிறார்’ - ராகுல் புதிய குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பிரதமர் நரேந்திர மோடியை இந்த பேரத்தில் நேரடியாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பாகவே தனக்கு கிடைக்கப்போகிறது என்பதை அனில் அம்பானி அறிந்திருந்தார் என்று ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரது இமெயில் அம்பலப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதிய குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.

இதுபற்றி டெல்லியில் நேற்று அவர் நிருபர்களை அவசர அவசரமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் பத்திரிகை ஒன்றில் வெளியான இமெயில் நகலை காட்டி கூறியதாவது:-

மின் அஞ்சல் தெளிவாக சொல்கிறது. அனில் அம்பானி பிரான்ஸ் ராணுவ மந்திரியை சந்தித்தார், ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பாகவே தனக்கு இந்த ஒப்பந்தம் கிடைக்கப்போகிறது என அவரிடம் கூறி உள்ளார்.

அனில் அம்பானியின் இடைத்தரகராக நரேந்திர மோடி செயல்பட்டுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அனில் அம்பானிக்கு தெரிய வந்தது எப்படி என்பது பற்றி பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.

இந்த ஒப்பந்தம் பற்றி ராணுவ மந்திரிக்கு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு, வெளியுறவு மந்திரிக்கு தெரியாது. ஆனால் அனில் அம்பானிக்கு மட்டும் தெரியும். இது உண்மை என்றால், அதிகாரப்பூர்வ ரகசியகாப்பு சட்டத்தை பிரதமர் மீறி இருக்கிறார். இந்த அடிப்படையில் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரான்ஸ் ராணுவ மந்திரியை அனில் அம்பானி சந்தித்துள்ளார். பிரான்சுக்கு இந்திய பிரதமர் பயணம் மேற்கொண்ட உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தான் கையெழுத்திட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதலில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர்களை தயாரிக்க விரும்புவதாக அவர் கூறி உள்ளார். இது ரகசியகாப்பு சட்டத்தை மீறியதாகும். இதுபற்றி தெரிந்த ஒரே நபர், பிரதமர் மட்டும்தான். இந்த சந்திப்புக்கு பின்னர்தான் அனில் அம்பானி அவரது விமான கம்பெனியை நிறுவி உள்ளார். அனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் செயல்பட்டிருக்கிறார்.

இது தேசத்துரோகம். உளவாளிகள் செய்யக்கூடியதை பிரதமர் செய்திருக்கிறார். ராணுவ விவகாரம் ஒன்றை அவர் யாரோ ஒருவருக்கு சொல்லி உள்ளார். இந்த ரகசியங்களை காப்பதற்கு அவர் பதவி ஏற்பின்போது உறுதிமொழி அளித்துள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கலாகி உள்ள தலைமை கணக்கு தணிக்கையர் (சிஏஜி) அறிக்கையை நான் ஏற்க மாட்டேன். அது மதிப்பற்ற ஒரு அறிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

இதில், ராகுல் காந்திக்கு பாரதீய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இது பற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், விமான வினியோக நிறுவனங்களின் இடைத்தரகராக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். ஏர்பஸ் நிறுவனத்தின் இமெயில் அவருக்கு எப்படி கிடைத்தது? இது சந்தேகத்தை எழுப்புகிறது. ராகுல் காந்தி இடைத்தரகராக செயல்படுகிறார் என்பது வெட்கக்கேடானானது என சாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com