ரபேல் மறுஆய்வு மனுக்கள், ராகுல் மீதான அவமதிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரபேல் மறு ஆய்வு மனுக்கள், ராகுல் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஆகியவற்றின்மீது விசாரணை முடிந்து, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.
ரபேல் மறுஆய்வு மனுக்கள், ராகுல் மீதான அவமதிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க போட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என கூறி, அவற்றை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.

டிசம்பர் 14-ந்தேதி வழங்கப்பட்ட அந்த தீர்ப்பை தொடர்ந்து, ரபேல் பேரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்பதற்கு ஆதாரமான சில ஆவணங்கள், ஊடகங்களில் கசிந்தன.

அதைத்தொடர்ந்து ரபேல் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து ரபேல் வழக்கில், புதிய ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந்தேதி அறிவித்தது.

இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது அமேதி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கருத்து தெரிவித்தபோது, காவலாளியே திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ராகுல் காந்தி மீது பாரதீய ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

அதில் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில் அவர் 2 முறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் அவர் நேரடியாக குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கோராதது கோர்ட்டின் கண்டிப்புக்கு வழிவகுத்தது.

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கடந்த 8-ந்தேதி 3 பக்கங்களைக்கொண்ட புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ரபேல் மறு ஆய்வு மனுக்களும், ராகுல் காந்தி மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் ஒன்றாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.

மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ரபேல் போர் விமான பேரத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வராமல் மறைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ரபேல் போர் விமான கொள்முதல் பேரத்தில் பிரதமர் அலுவலகம் இணை பேச்சு வார்த்தை நடத்தியது என்று கூறும் ஆவணங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். பிரதமர் அலுவலகம் நடத்திய இணை பேச்சுவார்த்தைக்கு, ரபேல் விமான பேர பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த 3 உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

இந்தப் பேரத்தை முடிவு செய்யும் நேரத்தில் அனில் அம்பானி, பிரான்ஸ் ராணுவ மந்திரியை சந்தித்தது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது எனவும் கூறினார்.

அருண்ஷோரி தரப்பில் வாதிட்டபோது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பில் அடங்கி இருக்கும் தவறுகள் அனைத்தும் மத்திய அரசு தாக்கல் செய்த தகவல்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன என கூறப்பட்டது.

மேல்முறையீடுகளுக்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார்.

அவர் வாதிடுகையில், முதன்மை வழக்கில் கூறிய அதே அம்சங்களைத்தான் மேல்முறையீட்டு வழக்கிலும் வழக்குதாரர்கள் கூறி உள்ளனர். திருடிய ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் கள் என குறிப்பிட்டார்.

மேலும், இந்திய, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள ரகசியகாப்பு சட்ட பிரிவையும் சுட்டிக்காட்டினார். இந்த ஒப்பந்தம் மேம்பாலம் அல்லது அணைகள் கட்டுவதற்கானது அல்ல, நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. ரபேல் போர் விமானங்கள் அலங்காரத்துக்கானது அல்ல, நம் ஒவ்வொருவரையும் பாதுகாப்பதற்கானது. உலகில் எங்குமே இப்படிப்பட்ட விவகாரம் கோர்ட்டுக்கு வந்தது கிடையாது. எனவே மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வாதாடினார்.

இதற்கு மத்தியில் ராகுல் காந்தி மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கிலும் வாதம் நடந்தது.

ராகுல் காந்தி தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எம். சிங்வி வாதிடும்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு விட்டார். தவறான வார்த்தைகளை கூறியதற்கு இந்த கோர்ட்டில் வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரினார்.

வழக்குதாரரான மீனாட்சி லேகி தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடும்போது, ராகுல் காந்தி கேட்டிருக்கும் மன்னிப்பை நிராகரிக்க வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி தனது கருத்துக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருமாறு உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

அதைத் தொடர்ந்து மறு ஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பையும், ராகுல் காந்தி மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் தீர்ப்பையும் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மறு ஆய்வு மனுக்களை பொறுத்தமட்டில் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாத உரையை 2 வாரங்களில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com