

புதுடெல்லி
ரபேல் போர் விமான கொள்முதலில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தள்ளுபடி செய்தது.
ரபேல் போர் விமான கொள்முதலில் வழக்கமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்த விளக்கம் திருப்திகரமாக இருப்பதால் இதில் விசாரணைக்கு தேவை இல்லை என கருதுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த தீர்ப்பு தொடர்பாக, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ரபேல் போர் விமான பேரம் தொடர்பான முக்கிய அம்சங்களை கணக்கில் கொள்ளாமல், அவை மறைக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ராணுவ அமைச்சகத்திடம் இருந்த ரபேல் போர் விமான பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. எனவே, திருடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த கோர்ட்டில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்திருக்கும் சில குறிப்புகளை இந்த நீதிமன்றம் ஏற்கக் கூடாது.
அரசின் அதிமுக்கியம் என்ற குறிப்புடன் வைக்கப்பட்டிருந்து, திருடப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இப்படிப்பட்ட ஆவணங்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதற்காக உள்நாட்டு ரகசியங்கள் பாதுகாப்பு மற்றும் கோர்ட் அவமதிப்பு எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதால் அவர் வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த விசாரணை அமையும் என நீங்கள் எடுத்துக்கொள்ள கூடாது என குறிப்பிட்டார்.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அதிமுக்கிய ரகசிய கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக உணவு இடைவேளைக்கு பின்னர் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு அறிவுறுத்திய நீதிபதி விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.