

புதுடெல்லி,
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதுகாப்பு விவகாரம் என்பதால் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பொது நலமனு தாக்கல் செய்த எம்.எல் சர்மா வாதிடுகையில், 36 போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறினார்.
இரு தரப்பிலும் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் நடைமுறைகள் குறித்து விளக்க அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வரும் 29 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.