ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராகவ் சத்தா விலகல்: பாஜகவில் இணைய முடிவு

ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராகவ் சத்தா விலகல்: பாஜகவில் இணைய முடிவு
Published on

ஆம் ஆத்மியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா, அந்த கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய துணைத் தலைவராக அசோக் மிட்டலை ஆம் ஆத்மி தலைமை நியமித்தது.

ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2024-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டபோது கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரியில் மதுபான கடைகள் ஒதுக்கீட்டு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதுதொடர்பாகவும் ராகவ் சத்தா எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பான கருத்துகளை அவர் எடுத்துரைக்கவில்லை. இதன் காரணமாகவே மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறின.

இந்த நிலையில், ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மேலும், பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார். ஊழலை ஒழிக்க வந்த கட்சி இப்போது ஊழல் கட்சியாகி விட்டது என்று ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டிய ராகவ் சத்தா, ஆம் ஆத்மி கட்சியின் பெரும்பான்மையான மாநிலங்களவை எம்.பி.க்கள் எங்களிடமே உள்ளனர். 3-ல் இரண்டு பங்கு எம்.பி.க்கள் எங்களிடமே உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங், ஸ்வாதி மலிவால் ஆகியோரும் ராகவ் சத்தாவுடன் இணைந்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ராகவ் சத்தாவுடன் ஆம் ஆத்மியின் மூத்த எம்.பி.க்களான அசோக் மிட்டல், சந்திப் பட்நாயக் ஆகியோரும் பேட்டி அளிக்கையில் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com