

புதுடெல்லி,
ஊரடங்கு தோல்வியில் முடிந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும்வகையில், பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நேற்று பேட்டி அளித்தார்.
ராகுல் காந்தியை விமர்சிக்கும் ஒரு கையேட்டையும் அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
137 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், கடந்த 26-ந் தேதி நிலவரப்படி, கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 345 பேர் பலியாகி உள்ளனர். ஆனால், சீனாவை தவிர்த்து, மற்ற 15 நாடுகளில் மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 562 பேர் பலியாகி உள்ளனர்.
பிரதமர் மோடி கைதட்ட சொன்னதையும், விளக்கேற்ற சொன்னதையும் முதலில் ராகுல் காந்தி விமர்சித்தார். சிறப்பு ரெயில்களில் பயணிக்க புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டு தவறு என்று நிரூபணமானது. கொரோனாவுக்கு எதிராக நாடு போராடத் தொடங்கியதில் இருந்தே அவர் நாட்டின் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்த முயன்று வருகிறார். பொய்யான தகவல்கள் மூலம் மக்களை திசைதிருப்ப பார்க்கிறார். மிகவும் பொறுப்பற்ற முறையில் நடக்கிறார். விளம்பரத்துக்காக அரசியல் செய்கிறார்.
ராகுல் காந்தி சொல்வதை காங்கிரஸ் முதல்-மந்திரிகளாவது கவனிக்கிறார்களா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். ஊரடங்கு குறித்தும், ஏழைகளுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறிய யோசனைகளை காங்கிரஸ் முதல்-மந்திரிகளே பின்பற்றவில்லை.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மராட்டிய மாநிலம் குறித்த ஒரு கேள்விக்கு கூட்டணி கட்சிகளின் மோதலில் தள்ளாடும் மராட்டிய மாநில அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்கவில்லை என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.