

உஜ்ஜயினி,
மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டு 6 விவசாயிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதனிடையே ராகுலின் விவசாயிகள் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ராகுல்காந்திக்கு வெங்காயம் எப்படி வளரும் என்று கூட தெரியாது எனக் கூறியுள்ளார்.
முன்னதாக உஜ்ஜயினி பகுதியில் பாஜக சார்பில் ஜான் ஆசிர்வாத் யாத்ரா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யாத்திரையை பாஜக தலைவர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், மண்டசூர் பகுதிக்கு சமீபத்தில் வருகை புரிந்த ராகுல்காந்தி, விவசாயிகளிடம் கலந்துரையாடியுள்ளார். அவர் விவசாயிகளிடம் நான் பிரதமராக இருக்க தயார் எனக் கூறியுள்ளார். யார் அவரை பிரதமர் ஆக்குவார்? அவருக்கு மிளகாய் மேல்நோக்கி வளருமா அல்லது கீழ்நோக்கி வளருமா, வெங்காயம் தரைக்கு மேல் வளருமா அல்லது தரைக்கு கீழ் வளருமா என்று கூட தெரியாது எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாஜக அரசு தொடர்ந்து நான்காவது முறையாக மாநிலத்தை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளும் நீண்ட கால பாஜக ஆட்சிக்கு முட்டுக்கட்டை போட்டு மாநிலத்தை கைப்பற்ற முயற்சித்து வருகின்றன.