

லக்னோ,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
பா.ஜனதா நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக 26-ம்தேதி (அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலையில் சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வாசித்த, கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் சுபம் வர்மா, இந்த வழக்கில் இருந்து ராகுல் காந்தியை விடுவிப்பதாக அறிவித்தார். தீர்ப்பு வாசித்தபோது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், டிரம்ஸ் வாசித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராகுல் காந்தி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியதால், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.