

கொல்கத்தா,
2019 தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகும் நிலையில் பிரதமர் கனவோடு இருக்கும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தி உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவே முனைப்பு காட்டுகிறார். இப்போது காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பாரா? என்பது கேள்விக்குறியானது. இதற்கிடையே பா.ஜனதாவும் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்காளம், ஒடிசாவில் இதுவரையில்லாத வகையில் அதிதீவிரம் காட்டுகிறது. கடந்த முறை மேற்கு வங்காளத்தில் இரு தொகுதிகளில் வெற்றிப்பெற்ற பா.ஜனதா இம்முறை 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி பணியாற்றுகிறது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி என்பது பேரழிவு என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒத்துக்கொண்டார் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணியை மாநில காங்கிரசிடம் விட்டுவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் காங்கிரசை காட்டிலும் பா.ஜனதாவின் கை உயர்ந்து காணப்படுகிறது.
சோமன் மித்ரா பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா மேற்கு வங்காளத்தில் கடைமட்டம் வரையில் விஸ்தரித்து வளர்கிறது. எனவே, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது கட்சிக்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்று நாங்கள் கூறியதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புக்கொண்டார். மாநிலத்தில் தேர்தலை எதிர்க்கொள்ள நீங்களே வியூகம் வகுத்துக்கொள்ளுங்கள், அதனை ஏற்பேன், என கூறியுள்ளார்.