

டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பு தொடர்பாக எழுந்துள்ள மோதல்களுக்கு மத்தியில், அக்குழுமம் குற்றவியல் ரீதியாக அழிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதி வில், "டாடா குழுமம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. ஆனால், எந்தவொரு தொழிலதிபரும் இதுகுறித்து பேச துணியவில்லை.
இந்திய தொழில் துறை என்பது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல. உங்களுக்கு துணிச்சல் இல்லை, ஆனால் எங்களுக்கு இருக்கிறது. இந்த அநீதிகளுக்கு எதிராக நாங்கள் நிச்சயம் நீதியை உறுதி செய் வோம்" என்று குறிப்பிட்டுள்ளார். டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிராக நோயல் டாடா அண்மையில் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘ஒவ்வொரு பிரச்சினையையும் நீங்கள் அரசியலாக்குகிறீர்கள். இதை தவிர்க்குமாறு கோருகிறேன். வணிகம் மற்றும் சட்ட விஷயங்களை கிரிமினல் என்று நீங்கள் முத்திரை குத்துவதை ஏற்க முடியாது.
இந்திய தொழில்துறையின், நமது தொழில்முனைவோரின் வெற்றிகளை நீங்கள் மீண்டும் மீண்டும் கண்டித்துள்ளீர்கள். இப்போது அவநம்பிக்கையையும் நச்சுத்தன்மையையும் பரப்புவதில் உங்களுடன் சேருமாறு நமது வணிக தலைவர்களையும் தூண்ட முயல்கிறீர்களா?”என்று பதிவிட்டுள்ளார்.