

புதுடெல்லி,
உத்தரப் பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் சிலர் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலம் பூரி நகருக்குச் சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜான்சி நகரில் ரயில் வந்தபோது, ரயிலில் இருந்த பஜ்ரங் தள அமைப்பினர், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மத மாற்றம் செயலில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறி அவர்களைத் அவமானப்படுத்தி அவர்களைப் பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர்.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கன்னியாஸ்திரிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, வேறு ரயிலில் அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சூழலில் கன்னியாஸ்திரீகள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இனி சங் பரிவார் என அழைக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்ன பிற அமைப்புகளை நான் இனி சங் பரிவார் என்று அழைக்க மாட்டேன். ஏனென்றால், குடும்பம் என்றால் அதில் பெண்கள் இருப்பார்கள். பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்கள் மீது அன்பும், இரக்கமும் இருக்கும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இது எதுவும் இல்லை. எனவே அந்த அமைப்பை இனி சங் பரிவார் என அழைக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.