”ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்” ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

ஐ.என்.சி ( இந்திய தேசிய காங்கிரஸ்) என்றால் ஐ நீட் கமிஷன் ( எங்களுக்கு கமிஷன் தேவை) என்று அர்த்தம் என பாஜக சாடியுள்ளது.
”ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்” ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

கடந்த 2007- முதல் 2012 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத்தரகருக்கு லஞ்சம் தரப்பட்டதாக பிரான்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தி இந்திய அரசியலில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. பிரான்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியில், இடைத்தரகர் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் கிடைத்த போதிலும் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் சிபிஐ தோல்வி அடைந்துவிட்டதாவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ள பாஜக, ராகுல் காந்தி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக கூறுகையில், இந்திய தேசிய காங்கிரஸ் ( ஐ.என்.சி) என்றால் ஐ நீட் கமிஷன் ( எங்களுக்கு கமிஷன் தேவை) என்று அர்த்தம்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ரா ஆகிய அனைவரும் எங்களுக்கு கமிஷன் தேவை எனக்கூறுகின்றனர். ரபேல் விவகாரத்தில் இத்தனை ஆண்டுகள் பொய்களை பரப்ப காங்கிரஸ் கட்சி ஏன் முயற்சித்தது என ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்.

தற்போது ராகுலின் காங்கிரஸ் அரசாங்கம் இருந்த சமயத்தில் தான், கமிஷன்கள் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு இடைத்தரகராக செயல்பட்டவரின் பெயரும் தெரியவந்துள்ளது என்று விமர்சித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com