பொய் சொல்வது யார்? பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்

இந்த ஆண்டின் சிறந்த ‘பொய்யர்’ என பாஜக விமர்சித்து இருந்த நிலையில், ராகுல் காந்தி அக்கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பொய் சொல்வது யார்? பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது, புதிய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து நாட்டில் உறுதியற்ற நிலையை உருவாக்க காங்கிரஸ் முயல்கிறது.

ஆனால் மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தேசிய மக்கள் தொகை பதிவேடு பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாது. அந்த தகவல்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் குறிப்பிட்டவர்களுக்கு சேர வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ஏழைகளை அடையாளம் காண மட்டுமே பயன்படுத்தப்படும்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவர் எதையும் பேசுவார், அனைத்து நேரங்களிலும் பொய் பேசுவார். இப்போது அவர் நீண்ட காலம் தலைவராக நீடிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பொய் பேசுகிறார். இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அதை பெறுபவர் ராகுல் காந்தியாகத்தான் இருப்பார்." இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், பிரகாஷ் ஜவடேகரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள ராகுல் காந்தி, நாட்டில் எந்த தடுப்புக்காவல் முகாம்களும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்த வீடியோவை நான் டுவிட்டரில் பகிர்ந்து இருந்தேன். ஆனால், அதே வீடியோவில் தடுப்பு முகாம்கள் இருப்பது பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன. எனவே, யார் பொய் சொல்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com