

புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்று உள்ளனர்.
இந்த கையெழுத்துகளுடன், விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரும் மனு ஒன்றை காங்கிரஸ் கட்சி தயாரித்து உள்ளது. இந்த மனுவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கட்சியினருடன் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வழங்குவதற்காக குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினார்.
இந்நிலையில் தடை உத்தரவை மீறி பேரணி நடத்த முயன்றதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.