ராகுல் காந்தி தள்ளிவிட்டார்... காயமடைந்த பா.ஜ.க. எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு; நடந்தது என்ன?

ராகுல் காந்தி, முன்னால் இருந்த எம்.பி. ஒருவரை தள்ளி விட்டதில் அவர் என் மீது விழுந்து விட்டார் என காயம் அடைந்த பா.ஜ.க. எம்.பி. சாரங்கி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தள்ளிவிட்டார்... காயமடைந்த பா.ஜ.க. எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு; நடந்தது என்ன?
Published on

புதுடெல்லி,

அரசியல் சாசனம் மீது மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று இரு அவைகளும் முடங்கின.

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் இரு அவைகளும் தொடங்கின. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அதன் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவையை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து அறிவித்து உள்ளார். இந்த விவகாரம் எதிரொலியாக, 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தள்ளிவிட்டார். அதனால், இந்த காயம் ஏற்பட்டது என அவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டார். அவர் என் மீது விழுந்ததில், நான் கீழே விழுந்தேன். நான் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்தேன்.

அப்போது வந்த ராகுல் காந்தி, முன்னால் இருந்த எம்.பி. ஒருவரை தள்ளி விட்டதில் அவர் என் மீது விழுந்து விட்டார் என கூறியுள்ளார். இதனால், சாரங்கியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com