

புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, ஒரு சில நிகழ்வுகளை நடத்திவிட்டு, பின்னர் காணாமல் போய்விடுகிறார் என சர்மிஷ்டா முகர்ஜி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி. கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சர்மிஷ்டா முகர்ஜி, 2015-ல் டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி குறித்து சர்மிஷ்டா விமர்சித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது;-
“கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தினார். அதற்கு குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக, ராகுல் காந்தி ஒரு சில நிகழ்வுகளை நடத்திவிட்டு, பின்னர் காணாமல் போய்விடுகிறார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் முதலாம் ஆண்டு தினத்தில் ராகுல் காந்தி எங்கே இருந்தார்? அரசியல் என்பது 24 மணி நேரப் பணி என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் சில பேரணிகளை நடத்திவிட்டு, சிலரை பார்த்து பேசிவிட்டு, பிறகு காணாமல் போய்விடுகிறார். என்னைப் பொறுத்தவரை இது அரசியல் அல்ல.
மேலும், மாநில சட்டமன்ற தேர்தல்களில், வெறும் கூட்டணிகளால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. கட்சியை முதலில் பலப்படுத்த வேண்டும். நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அவர்கள் கூட்டணி அமைப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வந்தனர். வெற்றி பெறுவதற்கு தங்கள் கட்சியின் பலத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை.
காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பலத்தின் மீது கவனம் செலுத்தப்படாமல் இருப்பதும், தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளும் ராகுல் காந்தியின் தோல்வியையே பிரதிபலிக்கின்றன. ஏனெனில், கட்சியின் முக்கிய முகமாக இருந்து ராகுல் காந்தியால் ஒரு தீர்க்கமான வெற்றியை பெற்றுத் தர முடியவில்லை.
2014 முதல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்து வருகிறார். அதே சமயம், 2014 முதல், காங்கிரஸ் அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது. பிரதமர் மோடி மாபெரும் மக்கள் தலைவராக உள்ளார். அவருக்கு கிடைக்கும் தேர்தல் வெற்றிகளின் மூலமே அவரது செல்வாக்கை காண முடியும். ராகுல் காந்தியால் அத்தகைய வெற்றியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தர முடியவில்லை. இது ராகுல் காந்தியின் தோல்வியே ஆகும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.