

புதுடெல்லி,
காங்கிரஸ் ஆட்சியில் இந்திய தொழில்முனைவோரின் மன உறுதி உடைக்கப்பட்டு, கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையை நோக்கி தள்ளப்பட்டனர் என்று நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “டாடா நிறுவனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுபற்றி எந்த தொழிலதிபரும் வாய்திறக்க முன்வரவில்லை. நீங்கள் எத்தனை காலம் அமைதியாக இருப்பீர்கள்? அவர்கள் உங்களை முழுமையாக வாங்கும் வரையிலா?
இந்திய தொழில்துறை என்பது மோடி மற்றும் அமித்ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல. உங்களுக்கு தைரியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பதிவிற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அனைத்து பிரச்சினைகளையும் அரசியலாக்குவதை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், வணிக மற்றும் சட்ட விஷயங்களை குற்றச்செயல்கள் என்று முத்திரை குத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்தியத் தொழில்துறை மற்றும் நமது தொழில்முனைவோரின் வெற்றிகளை நீங்கள் தொடர்ந்து கண்டித்து வருகிறீர்கள். இப்போது, அவநம்பிக்கையையும், விஷமத்தனத்தையும் பரப்ப உங்களுடன் சேர்வதற்கு நமது தொழிலதிபர்களை தூண்ட முயற்சிக்கிறீர்களா?
பல தசாப்தங்களாக, காங்கிரஸ் கட்சியின் 'உரிம-ஒதுக்கீட்டு’(License-Quota Raj) ஆட்சியின் கீழ் இந்திய தொழில்முனைவோரின் மன உறுதி உடைக்கப்பட்டு, கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையை நோக்கி தள்ளப்பட்டனர்.
மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நமது அரசாங்கம், இந்திய தொழில்துறையினரை வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், பொருளாதார வளர்ச்சியை இயக்குபவர்களாகவும் மதிக்கிறது. நமது கொள்கைகள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், தொழில்துறைக்கு ஆதரவளிக்கவும், முதலீட்டை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நமது தொழில்துறைக்கு ஆதரவளிப்பதற்கும், நமது விவசாயிகளை வலுப்படுத்துவதற்கும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சமமான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, உங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு ஏற்றவாறு ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவதை விட, ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபடுவது அவசியம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அதன் குடிமக்கள் அனைவருக்கும் நீதியை உறுதி செய்கிறது. மேலும் அதை நிலைநிறுத்தும் பொறுப்பு நமது நீதிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்களும், உங்கள் கட்சியும், உங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதமர்களும் நீதித்துறையை எவ்வளவு கேவலமான முறையில் இழிவுபடுத்தியுள்ளீர்கள் என்பதற்கு வரலாறே சாட்சி. எனவே, ராகுல் காந்தி அவர்களே, எல்லா இடங்களிலும் பேய்களைப் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.