

புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருள் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பஞ்சாப் காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க அரசு முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் போதைப் பழக்கத்தை ஒழிக்கும் வகையில் போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் சோதனையை மேற்கொள்ள அம்மாநில முதல்-மந்திரி அம்ரிந்தர்சிங் உத்தரவிட்டுள்ளார். சோதனையை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை வகுக்குமாறு அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளார்க் அலுவலர் முதல் அதிகாரி வரை இருக்கும் நபர்களுக்கு போதை மருந்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனைகள் முகாம்கள் நடத்தி அதன் மூலமும் அதிகாரிகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகின்றனரா என பரிசோதிக்கப்பட உள்ளனர். பஞ்சாப் அரசின் நகர்வு இப்போது விவாதப்பொருளாகியுள்ளது.
இவ்விவகாரத்தில் பஞ்சாப் மாநில மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் மருத்துவ பரிசோதனையானது காவல் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு மட்டும் ஏன் நடத்த வேண்டும்? அரசாங்கம், மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை குழுக்களுக்கும் சேர்த்து இந்த போதை மருந்து மருத்துவ பரிசோதனையை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, ஏ.என்.ஐ. நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், போதை மருந்து பரிசோதனை குறித்து மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியதை நான் வரவேற்கிறேன். 70 சதவீத பஞ்சாபியர்கள் போதை மருந்து உபயோகிக்கிறார்கள் என்று அவர் கூறினாரே தவிர ராகுல்காந்தி குறித்து அவர் வேறு ஏதும் குறிப்பிடவில்லை. ராகுல்காந்தி நிச்சயமாக போதைப்பொருள் எடுத்து கொள்கிறார். குறிப்பாக கொக்கையின். போதை மருந்து பரிசோதனை அவரிடம் மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தோல்வியடைவார் எனக் கூறியுள்ளார்.
இதனிடையே போதை மருந்து பரிசோதனை குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கூறுகையில், போதை மருந்து பரிசோதனை குறித்து எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. மாநிலத்தில் போதை பொருள் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற குற்ற செயல்கள் மிகப்பெரிய அளிவில் இருக்கும் போது, பரிசோதனையை மேற்கொள்ள எவருக்கும் பிரச்சனை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.