

புதுடெல்லி,
நாடு முழுவதும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.100-ஐ கடந்து விற்கப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல், டீசலின் விலை உயர்வு காரணமாக வாகனங்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், அவற்றை விட்டுவிட்டு பொதுப்போக்குவரத்துக்கு மாறி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்தவகையில் டெல்லி மெட்ரோ ரெயிலில் திடீரென கூட்டம் அதிகரித்து உள்ளது. ரெயிலுக்காக பல நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், பொது போக்குவரத்துக்கான நீண்ட வரிசை, கொரோனா கட்டுப்பாடுகளால் மட்டும் அல்ல. உங்கள் நகரின் பெட்ரோல்-டீசல் விலையை பாருங்கள், உண்மையான காரணம் புரியும் என குறிப்பிட்டு உள்ளார்.