

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-ந்தேதி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேசியபோது பிரச்சினை வெடித்தது.
சீன ஆக்கிரமிப்பு குறித்த முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கட்டுரையில் தொடங்கிய அந்த பிரச்சினை, 8 எம்.பி.க்கள் பதவி நீக்கத்துக்கு காரணமாகி பின்னர் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் கோப்புகள் என நீண்டது. இதன் காரணமாக கடந்த 64 நாட் கள் அமளியிலேயே சென்றது. நேற்று மதியத்துக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி இருக்கிறது.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் பெண் எம்.பி.க்கள் பிரதமர் மீது விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்ற இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். இதுவும் எதிர்க்கட்சியினரை எரிச்சல் அடைய வைத்தது. ஏற்கனவே ராகுல் காந்தியை பேசவிடாமல் செய்கிறார்கள் என முழங்கி வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விஷயத்தையும் பெரிதுபடுத்தினர்.
இதன் காரணமாக அவர்கள் சபாநாயகர் ஓம் பிர்லா மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தனர். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது.
பின்னர் இதனை செயல்படுத்துவதற்காக உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணியை உடனடியாக தொடங்கினர். தீர்மான நோட்டீசில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி கட்சி, கம் யூனிஸ்டுகள் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத் திட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இதில் கையெழுத்திடவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து இந்த நோட்டீசை காங்கிரஸ் தலைமை கொறடா கொடிக்குன்னில் சுரேஷ் தலைமையில் கூட்டணி கட்சியினர் மக்களவை செயலாளர் உத்பால்சிங் குமாரிடம் அளித்தனர்.
இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று பேசவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில் இன்று நடைபெறும் பட்ஜெட் விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என எம்.பி.க்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் விவாதத்தில் சசி தரூர் எம்.பி. பங்கேற்ற நிலையில் இன்று ராகுல் காந்தி பேசவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தி பேசிய பிறகு பட்ஜெட் விவாதத்திற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளார். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது ராகுலை பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. ராகுல் காந்தி பேச மறுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஒரு வாரமாக மக்களவை முடங்கியது.