

புதுடெல்லி,
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி வருகிற 16-ம் தேதிமுதல் 19-ம் தேதி வரை 4 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின்போது, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் நடைபெறும் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். குறிப்பாக, 17-ம் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்தித்து உரையாடுகிறார்.
அப்போது, உலக அளவில் மாணவர் இயக்கங்களின் எழுச்சி, ஜனநாயகம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் கலந்துரையாட உள்ளார்.
மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் அமைப்பின் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.